கோடைகாலத்தில் முகத்தில் எரிச்சல், அரிப்பு, முகப்பரு போன்ற பிரச்சனைகள் அதிகமாக நேரிடும். இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட பெண்கள் பல்வேறு வைத்தியங்களை கையாளுவர். மேலும், பலர் நிறைய செலவு செய்த தங்கள் அழகை தக்க வைத்துக் கொள்ள பாடுபடுவதும் உண்டு. அதனால், பக்கவிளைவுகளை சந்திக்கவும் நேரும். ஆனால், எந்த செலவும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உங்கள் அழகை மெருகேற்ற முடியும். அதிலும், கோடைகாலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். உங்களுக்கு முகத்தில் இருக்கும் முகப்பருவால் நிறைய தொந்தரவு ஏற்பட்டால், நீங்கள் மஞ்சள் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். மஞ்சளைப் பயன்படுத்தி நிறைய ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே செய்திடலாம். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
மஞ்சள், காபி மற்றும் தயிர்
இந்த ஃபேஸ் பேக் செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் காபி தூளுடன் சிறிது தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். தயாரித்த அந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிடவும். முகத்தை கழுவி பின்னர், மறக்காமல் மாய்ஸ்சரைசர் தடவவும். வாரத்திற்கு 2 முறை இதை செய்து வரவும்.
மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை
முதலில், ஒரு கிண்ணத்தில் ஒரு சிட்டிகை மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இப்போது இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இந்த ஃபேஸ் மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இதனால், சிறப்பான பலனை பெற்றிட முடியும்.
மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல்
செடியில் இருந்து எடுத்த ஃப்ரஷ் கற்றாழையாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கி கற்றாழை ஜெல்லாக இருந்தாலும் சரி, அதை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பேஸ்ட் மாதிரி நன்கு கலந்ததும், அதை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊற விடவும். அதற்குப் பிறகு, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, பின்னர் தவறாமல் மாய்ஸ்சரைசர் தடவவும்.