சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஸ்வீட் கார்ன் பிடித்தமான ஒன்று. அந்த ஸ்வீட் கார்ன் அப்படியே வேக வைத்து சாப்பிடுவோம். சற்று வித்தியாசமாக அந்த ஸ்வீட் கார்னை வைத்து கிரேவி செய்து பாருங்கள். நிச்சயமாக வீட்டில் உள்ள அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள், இப்போது ஸ்வீட் கார்ன் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

  • ஸ்வீட் கார்ன் - 1 கப்
  • தண்ணீர் - 1 கப் (கார்ன் வேக வைக்க)
  • கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 2 (அரைத்தது)
  • இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிது
  • உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

  • எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)

செய்முறை:

  • முதலில் குக்கரில் ஸ்வீட் கார்னை போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிடவும். பின், விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடித்துவிட்டு கார்னை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • அத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
  • அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அதில் வேக வைத்து எடுத்த கார்னை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  • அடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஸ்வீட் கார்ன் கிரேவி தயார்.

குறிப்பு:

  • வேண்டுமானால் தக்காளியை அரைத்து பயன்படுத்துவதற்கு பதிலாக, பொடியாக நறுக்கியும் பயன்படுத்தலாம்.
  • தேங்காய் பால் சேர்த்ததும் அதிகம் கொதிக்கவிடக்கூடாது.