இதுவரை எத்தனையோ சட்னி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால், உருளைக்கிழங்கில் சட்னி செய்துள்ளீர்களா? ஆமாங்க, உருளைக்கிழங்கை வைத்து அட்டகாசமான சட்னி செய்யலாம். இது, சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருக்கும், செய்வதும் சுலபம் தான். வாருங்கள் இப்போது உருளைக்கிழங்கு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • பெரிய உருளைக்கிழங்கு - 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பூண்டு - 4 பல்
  • வரமிளகாய் - 2

தாளிப்பதற்கு…

  • நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

  • முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு தேவையான பொருட்களான வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு மைய அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து உருளைக்கிழங்கு நன்கு வேக விட்டு இறக்கிடவும்.
  • இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி தாளித்து சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார்.

குறிப்பு:

  • உருளைக்கிழங்கு அதிமாக வேக விட வேண்டாம்.
  • வேண்டுமானால், ஃப்ளேவருக்காக அத்துடன் 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நல்லெண்ணெய் பிடிக்காவிட்டால், சாதாரண சமையல் எண்ணெயையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Image Courtesy: sharmispassions