இனி குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் வாங்கி தர வேண்டாம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சுட சுட கட்லெட் மற்றும் ஒரு டம்ளர் டீ கொடுத்தால் அவ்வளவு சந்தோஷமாக விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஒரு முறை செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவதோடு, அடிக்கடி செய்து தர சொல்லி நிச்சயம் கேட்பார்கள். சரி இப்போது பாசிபருப்பு கட்லெட் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு - 1 கப்
- பச்சை குடைமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 1 (பொடியாக நறுக்கிய)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிய)
- பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கிய)
- கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
- மாங்காய் பொடி (ஆம்சூர் பவுடர்) - 1/4 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
- முதலில் பாசி பருப்பை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர், தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்டாக அரைத்து கலக்கவும். பின் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப தண்ணீரை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும்.
- அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதிக தண்ணீர் இல்லாமல், மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- தயாரித்த மாவுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- மாவு சிறிதளவு நுரை வரும் வரை சில நிமிடங்கள் வேகமாக கலக்கவும்.
- பின்னர், ஒரு சிறிய கடாயில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- வெண்ணெயை உருகி சூடானதும் அதில் தயாரித்த வைத்த மாவு கலவை மொத்தமாக ஊற்றி சில நிமிடங்களுக்கு சமைக்கவும். சிறிய பான் உபயோகித்தால் கட்லெட் ஒரு அளவில் தடிமனாக செய்ய முடியும்.
- பின்னர் அதை மறுபுறம் திருப்பி, மிருதுவாக மொறுமொறுவென்று ஆகும் வரை நன்கு சமைக்கவும்.
- மீதமுள்ள மாவையும் இதேபோல் ஊற்றி எடுக்கவும். இறுதியாக பாசிபருப்பு கட்லெட்டை கெட்ச்அப், புளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறினால் அருமையாக இருக்கும்.