கோடைகாலம் என்றாலே மாம்பழ சீசன் தான் நினைவிற்கு வரும். அதிகமாக கிடைக்கும் மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு அருமையாக ஸ்வீட் செய்து ஜில்லென்று சாப்பிட்டால எப்படி இருக்கும். அதற்கு ஏற்ற ரெசிபி தான் இந்த மாம்பழ சர்பெட். புரியா பெயராக இருக்கிறதே என்றெல்லாம் இல்லை. இதுவும் ஐஸ்க்ரீம் மாதிரி தான். ஆனால், இதை செய்வது மிகவும் சுலபம். உங்கள் வீட்டில் மாம்பழம் இருந்தால் மட்டும் போதும் உடனே செய்து விடலாம். கோடை வெயிலை இந்த சர்பெட் நொடியில் மறக்க செய்து விடும். சரி வாருங்கள், மாம்பழ சர்பெட் எப்படி செய்வதென்று இப்போது தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்:
- நன்கு கனிந்த மாம்பழங்கள் - 3 கப் (தோலுரித்து சிறு துண்டுகளா நறுக்கியது)
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - தேவையான அளவு
- புதினா இலைகள் - ஒரு கையளவு
செய்முறை:
- முதலில் மாம்பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஜிப்லாக் கவர் ஒன்றில் போட்டு, ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்கவும். உங்கள் வீட்டில் ஜிப்லாக் கவர் இல்லையென்றால், ஏதாவது பிளாஸ்ட் டப்பாவில் கூட போட்டு வைத்து கொள்ளுங்கள். மாம்பழத்தை உறைய வைத்து அரைத்தால் தான் அது ஐஸ்க்ரீம் மாதிரியான பதத்தில் க்ரீமியாக இருக்கும்.
- மாம்பழத் துண்டுகள் நன்கு உறைந்ததும், அதை ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, புதினா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரே அடியாக அரைக்காமல் விட்டு விட்டு அரைக்கவும். ஒரே அடியாக அரைக்கும் போது மிக்ஸர் ஜாரில் ஒரு வித சூடு ஏற்படும். அது சர்பெட் பதத்தைக் கெடுத்துவிடும்.
- மாம்பழ கலவை நன்கு க்ரீம் பதத்திற்கு ஆனதும் அதை ஒரு பௌலில் மாற்றி உடனே பரிமாறலாம் அல்லது, ஃப்ரீசரில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறலாம்.
- ஃப்ரீசரில் வைத்து சாப்பிடுகிறீர்கள் என்றால் அதை வெளியே எடுத்து 10 நிமிடங்கள் வைத்த பின்னர் தான் பரிமாற வேண்டும்.
- இப்படி தயாரித்த சர்பெட்டை ஒரு வாரம் வரை வைத்து கூட சாப்பிடலாம்.
- ஒருமுறை இதை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் பின்னர் கடையில் ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டுமென்று கேட்கவே மாட்டார்கள்.
Image Courtesy: yummytummyaarthi