மட்டன் குழம்பு எப்போதும் ஒரு ஸ்டைலில் செய்பவரா நீங்கள்? அப்படியெனில், இனி கவலை வேண்டாம். இந்த கட்டுரையில் கொங்குநாடு ஸ்டைலில் மட்டன் குருமா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் செய்முறை மிகவும் சுலபமானது தான். இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். வாருங்கள், இப்போது அதன் செய்முறையைப் பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
- மட்டன் - 500 கிராம்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிது
- தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு…
- வெங்காயம் - 3/4 கப் (நறுக்கியது)
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
- கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச் துண்டு
- பூண்டு - 3 பல்
- கிராம்பு - 2
- பட்டை - 1 இன்ச் துண்டு
- வரமிளகாய் - 3
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வறுக்க தேவையான பொருட்களில் தேங்காயைத் தவிர்த்து பிற பொருட்களை சேர்த்து வதக்கவும். அதில் வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை குறைவான தீயில் வைத்து வதக்கவும்.
- பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு, அதில் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் கழுவிய மட்டன் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும். மட்டன் சிறிது நீர் விட்டு வதங்கியதும், அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கிளறவும்.
- உப்பு சுவை பார்த்தது வேண்டுமென்றால் சேர்த்து, குக்கரை மூடி மிதமான தீயில் 8 முதலட 10 விசில் விட்டு இறக்கிடவும்.
- குக்கர் விசில் போனதும் திறந்து மேலே கொத்தமல்லி இலையைத் தூவினால், சுவையான கொங்கு ஸ்டைல் மட்டன் குருமா பரிமாற தயார்.