தினந்தோறும் ஒரே மாதிரியான சட்னிகள், சாம்பார் வைத்து சலித்து விட்டதா? வீட்டில் கறிவேப்பிலை இருந்தால் இந்த சட்னியை செய்து பாருங்கள். ஒரு முறை செய்து சுவைத்து பார்த்தால் வாரத்தில் ஒருமுறையாவது நிச்சயம் செய்ய தோன்றும். அதிலும், சாப்பிட்டில் இருந்து கறிவேப்பிலையை எடுத்து வைக்கும் நபர்களுக்கு இதை செய்து கொடுங்கள், வேண்டாம் என்று கூறாமல் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள், இப்போது கறிவேப்பிலை எப்படி செய்வதென்று பார்ப்போம்…
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க…
- கறிவேப்பிலை - 1/2 கப்
- தேங்காய் - 1/4 கப்
- உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1 சிறியது
- புளி - 1 சிறிய துண்டு
- உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க…
- எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிறிய சிட்டிகை
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்தவுடன், அதில் புளி சேர்த்து கிளறி இறக்கி ஆற விடவும்.
- பின்னர், மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
- மீண்டும் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்தால், சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions