கோடை காலத்தில் அதிகப்படியான வியர்வை, வெயில் காரணமாக உடல் உஷ்ணம் அதிகரித்து பெரும்பாலான மக்கள நோய்வாய்ப்படுகிறார்கள். அதிலும், அக்னிநட்சத்திரம் தொடங்கியதால் இன்னும் வெயிலின் கொடுமை அளவிற்கு அதிகமாக வாட்டி வதைக்கும். இதன் காரணமாக மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம். சரி, உடலின் உஷ்ணத்தை தணிப்பது எப்படி? குளிர்ச்சியாக காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து கொள்வது. அப்படி கோடையில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினசரி உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாருங்கள் அவற்றை படித்து தெரிந்து கொள்வோம்…
இளநீர்
கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது சிறந்த அருமருந்தாகும். உண்மையில், இளநீரில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடன், இளநீர் உடலை குளிர்விக்கிறது. மேலும், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் வெப்பத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, கோடைகாலம் மட்டுமல்ல எல்லா காலத்திலும் குடிக்க இளநீர் அற்புதமான ஒன்று.
தர்பூசணி
கோடைகால பழங்களில் தர்பூசணியும் ஒன்று. தர்பூசணியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அதே சமயம், இது வைட்டமின் ஏ இன் மிகச் சிறந்த மூலமாகும். கோடையில் தர்பூசணி உடலில் உள்ள நீரின் அளவையும் குறைய விடாமல் சீராக வைத்திருக்க உதவுகிறது. தர்பூசணியில் 90% தண்ணீர் உள்ளதால், இது உடலை நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சம்பழம் அனைத்து காலங்களுக்கும் ஏற்ற உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய ஒன்று. இருப்பினும் கோடையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து ஒரு நாளை தொடங்கினால் அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அது கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த பானமாகவே கருதப்படுகிறது. உண்மையில், நீங்கள் எலுமிச்சை சாற்றில் உப்பு, ஒரு சிட்டிகை சீரகப் பொடியை சேர்த்து குடிக்கலாம். இப்படி குடிப்பது நாள் முழுவதும் உங்களை குளிர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவிடும்.
தயிர்
கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சொல்லப்போனால் தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். அதே சமயம், தயிர் சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும். அன்றாட உணவில் தயிரைக் கட்டாயம் சேர்த்து வந்தால் உடல் சூட்டை தணித்து, கோடைகால உஷ்ண பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.
புதினா
கோடையில் புதினா மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்று. நீங்கள் தயிர், மோர் அல்லது பச்சடியில் புதினாவை சேர்த்து சுவைக்கலாம். புதினா உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் புத்துணர்ச்சியையும் தருகிறது. எனவே, முடிந்தவரை அன்றாட உணவுகளில் புதினாவைப் பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இதை சாப்பிட்டால் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இது தவிர, கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கிடும். உண்மையில், வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், கோடை காலத்தில் வெள்ளரிகளைச் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.