ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மாசடைந்த சுற்றுச்சூழலில் நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு தவறான செயல்களும் நம் உடலை தான் நேரடியாக பாதிக்கிறது. அவசர வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ சிலர் சிறுநீரை நேரத்திற்கு கழிக்காமல், பிறகு போகலாம் என்று அடக்கி வைத்திருப்பர். இது பார்ப்பதற்கு சாதாரண செயலாக தெரியலாம். ஆனால், உண்மையில் இது உடலளவில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்போது அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…
*நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீர் பாதையில் நோய்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும். இது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
*அடிக்கடி அல்லது தினசரி சிறுநீர் கழிப்பதை அடக்கி வைப்பவர்களுக்கு சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பையில் வலி ஏற்படக்கூடும். இதன் மூலம், நீங்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். ஏனென்றால், நிரம்பிய சிறுநீர் பையானது, நீண்ட நேரம் கழித்து வெளியேற்றப்பட்டதன் காரணமாக, உள்ளிருக்கும் தசைகள் சுருங்கக்கூடும், இதன் காரணமாக இடுப்புப் பகுதியிலும் தசைகளில் வலி ஏற்படும்.
*உடலில் இருக்கும் அசுத்தங்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக தான் வெளியேற்றப்படும். அப்படிப்பட்ட சூழலில், சிறுநீரை சரியான நேரத்தில் வெளியேற்றாவிட்டால் உடலில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
*சிறுநீர் கழிப்பதை நிறுத்தினால் சிறுநீர்ப்பை, சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படக்கூடும். இது சிறுநீரகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது.
*சிறுநீரை அதிக நேரம் அடக்குவது என்பது, சிறுநீரகத்தின் செயல்பாட்டைத் தடுக்கும் செயலாகும். மேலும் அதன் செயல்திறனையும் பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
*நீண்ட நேரத்திற்கு சிறுநீரை அடக்கி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை நிறுத்துவதன் மூலம், சிறுநீர்ப்பையில் வீக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகளை படித்து தெரிந்த பிறகாவது, சிறுநீரை அடக்கி வைக்காமல், அவ்வபோது அவற்றை வெளியேற்றி விடுங்கள். இது உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செயல் என்பதை மட்டும் எக்காரணம் கொண்டும் மறவாதீர்கள். தெரியாதவர்களுக்கு இதனை எடுத்து கூறவும் மறவாதீர்கள்.