கொய்யாப்பழம் என்பது நம் ஊர் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது 5 ஆப்பிள் சாப்பிட்டதற்கு சமம். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். செரிமானம் முதல் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய கொய்யாப்பழம் பெரிதும் உதவிடும். கொய்யாப்பழம் மட்டுமல்ல கொய்யா மரத்தின் இலைகள் கூட பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்த இலைகள் முறையாக உட்கொள்ளும் போது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை விரட்டிட உதவும். கொய்யா இலையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் கொய்யா இலை டீ எப்படி போடுவது என்பதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

உடல் எடை குறைப்பு
நாம் உண்ணும் உணவில் இருக்கக்கூடிய சிக்கலான செரிக்கப்படாத மாவுச்சத்து சர்க்கரையாக மாறும்போது, உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. கொய்யா இலைகள் இந்த செயல்முறையை தடுத்து நிறுத்த உதவுகிறது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. அதுதவிர, உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட்டைக் குறைக்கும் சக்தியும் இந்த இலைகளுக்கு உண்டு. எனவே, இதனை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை நீங்கும்.
வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் கொய்யா இலைகளை தாராளமாக பயன்படுத்தலாம். ஏனென்றால், இது வயிற்றுப்போக்கை நிறுத்திட மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு கொய்யா இலை டீ யை ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால் வயிற்று போக்கு உடனடியாக நின்று விடும். கொய்யா இலையின் சாறு வயிற்றுப்போக்கை உண்டு பண்ணும் பாக்டீரியாக்களை அழித்திடும். இதனால் வயிற்றுப்போக்கு நிற்பதோடு, அதனால் ஏற்படும் அடிவயிற்று வலியும் சரியாகும்.
கொழுப்பின் அளவைக் குறைக்கும்
அதிக எண்ணெய் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் நீங்கள் கொய்யா இலை டீயை குடிக்க ஆரம்பிக்கலாம். இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும்
கொய்யா இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்ய கொய்ய மரத்தின் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து மைய அரைத்து தலையில் தடவி குளிக்கவும். இப்படி செய்து வர, உங்கள் கூந்தல் பட்டுப் போல மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
நீரிழிவு நோய்
கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து கொய்ய இலை டீ குடித்து வர அவர்களது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு குறைய தொடங்கும். ஆனால் இதற்காக, கொய்ய இலை டீயை தினமும் ஒரு வேளை என சுமார் 3 மாதங்களுக்கு குடித்து வந்தால் தான் நல்ல நிவாரணத்தைப் பெற முடியும்.

கொய்யா இலையில் டீ போடுவது எப்படி?
தேவையான பொருட்கள்
- சுத்தமான கொய்யா - 5
- சுத்தமான தேன் - தேவையான அளவு
- ஏலக்காய் - 2
செய்முறை
- சுத்தமான கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்.
- கொய்யா இலை வாசனை பிடிக்காதவர்கள் அத்துடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
- பின்னர் அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.