இந்திய உணவுகளில் பல வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றோம். இந்த பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவை தான் மிளகாய். அந்த மிளகாயில் இரண்டு வகை உண்டு. முதலாவது சிவப்பு மிளகாய், இரண்டாவது பச்சை மிளகாய். சிலர் தங்களது சமையலில் பச்சை மிளகாயைப் பயன்படுத்துவர், சிலர் சிவப்பு மிளகாயைப் பயன்படுத்துகின்றனர். சரி இந்த 2 மிளகாயிலும் அப்படி என்ன தான் வித்தியாசம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அதற்கான பதிலை தான் இந்த கட்டுலையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நமது உடல் ஆரோக்கியத்திற்கு இந்த 2 மிளகாயில் எந்த மிளகாய் சிறந்தது என்பதை பார்ப்போம்…
பச்சை மிளகாயின் நன்மைகள்
பச்சை மிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அதே நேரத்தில், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கவும் இது உதவியாக இருக்கும். இதைத் தவிர, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பச்சை மிளகாயை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும். இதில் கலோரிகள் எதுவும் கிடையாது. மேலும், இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் கலோரிகளை எரித்திடவும் உதவிடும். அதுமட்டுமின்றி, இது உங்கள் சருமத்திற்கும் சிறந்தது.
சிவப்பு மிளகாயின் நன்மைகள்
சிவப்பு மிளகாயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் உடல் நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அதே சமயம், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுகிறது. சிவப்பு மிளகாய் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் நல்லது. உண்மையில், இதில் கேப்சைசின் என்ற கலவை உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்க மிகவும் உதவியாக இருக்கும். சிவப்பு மிளகாயில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால், இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்திடவும் உதவுகிறது. சிவப்பு மிளகாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகவே இருந்தாலும், அதை குறைந்த அளவு உட்கொள்வது தான் சிறந்தது.
முடிவுரை
இரண்டு மிளகாயையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, இரண்டிலுமே உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இருப்பினும். சிவப்பு மிளகாயைக் காட்டிலும், பச்சை மிளகாயில் கலோரிகளும் குறைவாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிக ஏற்றதாக கருதப்படுகிறது. அதற்காக, சிவப்பு மிளகாயை சாப்பிட கூடாது என்று யாரும் கூறிட முடியாது. அதனை அளவாக உட்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது.