இன்றைய மாறுபட்ட வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுகளை அனைவரும் விரும்பி உண்ண தொடங்கி விட்டனர். இதன் காரணமாக சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, இந்த பிரச்சனை காணப்படுகிறது. நாட்டின் பெரும்பகுதியான மக்கள் இந்த நோயின் பிடியில் சிக்கியிருப்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக சில யோகாசனங்கள் விளங்குகின்றன. தினந்தோறும், மருந்து மாத்திரை சாப்பிட்டு கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயை, சில யோகாசனங்களை தினந்தோறும் செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். சர்வதேச யோகா தினமாக இன்று நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்களைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்ல போகிறோம்…

மண்டூகாசனம்
இந்த ஆசனத்தை செய்ய முதலில் முழங்கால்களை மடக்கி வஜ்ராசன நிலையில் அமரவும். பின்னர், உள்ளங்கையில் கட்டை விரலை மடக்கி கைகளை இறுக்கமாக மூடவும். அதன் பிறகு, இரண்டு கைகளின் மூடிய கைகளை தொப்புளின் மேல் வைக்கவும். இப்போது மூச்சை இழுத்து, வெளியேற்றும் போது உடலை முன்னோக்கி தரையை நோக்கி வளைத்து, சிறிது நேரம் இதே நிலையில் இருக்கவும். பிறகு, சுவாசிக்கும்போது வஜ்ராசன நிலைக்கு திரும்பவும். இந்த ஆசனத்தை தொடர்ந்து 3 முதல் 4 முறை செய்யவும். உண்மையில், இந்த ஆசனம் செய்வதன் மூலம், வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகள் நன்கு இயங்கி, செரிமான அமைப்பை சீராக்கும். இது தவிர, மண்டூகாசனம் கணையத்தைத் தூண்டுவதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கபால்பதி பிராணயாமம்
இந்த யோகாசனத்தை செய்ய, முதலில் தியான நிலையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு உடலை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து தளர்வாக விடவும். இப்போது உங்கள் இரு நாசி வழியாகவும் சுவாசிக்கவும். இதனால் வயிறு வீங்கி மூச்சை வெளிவிடும் போது வயிற்றின் தசைகளை முடிந்தவரை சுருக்கவும். நீங்கள் சுவாசிக்கும்போது எந்த விதமான சக்தியையும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையில், சர்க்கரை நோயாளிகள் கபால்பதி பிராணாயாமம் செய்வது மிகவும் நன்மை பயக்கும். இவ்வாறு செய்வதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஆசனம் பெரிதும் உதவும்.

பஸ்சிமோத்தானாசனம்
இந்த ஆசனத்தை செய்ய, முதலில், ஒரு சம தளத்தில் அமர்ந்து, உங்கள் கால்களை முன்னோக்கி நீட்டி உட்காரவும். பின்னர், மூச்சை உள்ளிழுக்கும் போது, உங்கள் உடலை முன்னோக்கி வளைத்து, உங்கள் கைகளால் கால் கட்டை விரலைப் பிடிக்க முயற்சிக்கவும். இப்போது உங்கள் தலையை முழங்கால்களில் வைத்து சிறிது நேரம் இதே நிலையில் இருக்க முயற்சிக்கவும். இதே நிலையில் நீங்கள் ஹலாசனம், தனுராசனமும் செய்யலாம்.