நீங்கள் எப்போதும் ஒரு மாதிரியான சட்னியை இட்லி, தோசைக்கு செய்கிறீர்களா? வித்தியாசமான சட்னி ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசை உள்ளதா? உங்கள் வீட்டில் தயிர் இருந்தால் போதும் அட்டகாசமான, ருசியான சட்னியை எளிதில் செய்து விடலாம். தயிரை வைத்து சட்னியா? என்று நீங்கள் கேட்கலாம். இந்த தயிர் சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிடும் போது அருமையாக இருக்கும். வாருங்கள், இப்போது அதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்:
- கெட்டி தயிர் - 1 கப்
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு…
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் தயிருடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
- இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை நன்கு வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு அதில் மசாலா கலந்த தயிரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் மூடி வைத்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- சட்னியில் இருந்து மசாலாகளின் பச்சை வாசனை போன பிறகு, எண்ணெய் தனியே பிரிய ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான தயிர் சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions