இந்த வார இறுதியில் இறால் செய்யும் பிளானில் இருக்கீர்களா? அப்படியெனில், செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு வையுங்களேன். இந்த அட்டகாசமான ரெசிபி வீட்டில் உள்ள எல்லாருக்கும் நிச்சயம் பிடிக்கும். செய்வதும் மிக சுலபம் தான். இதை சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றால் நிச்சயம் செய்து பாருங்கள். பின்னர், அடிக்கடி செய்ய மனம் ஆசைப்படும். சரி வாருங்கள், இப்போ செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • இறால் - 500 கிராம்

வறுத்து அரைப்பதற்கு…

  • மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் - 2-3
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • ஓமம் - 1/2 டீஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 3
  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  • கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

குழம்பிற்கு…

  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்
  • சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் இறாலை நரம்புகளை நீக்கி நன்கு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறியதும், ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர், அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அத்துடன் பொடியான நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதங்கியதும், பச்சை மிளகாயும், நறுக்கிய தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு மென்மையானதும் அதில் அரைத்த மசாலா பொடி மற்றும் குழம்பு வைக்க கொடுக்கப்பட்டுள்ள பிற மசாலா பொடிகளையும் சேர்த்து கிளறவும்.
  • பின்னர், அதில் தேவையான அளவு நீர் ஊற்றி சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • இறுதியாக கழுவிய இறாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு தயார்.

Image Courtesy: yummytummyaarthi