சிக்கனை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபி செய்ய விரும்பினால் குடைமிளகாய் சேரத்து செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இது நிச்சயம் இருக்கும். இந்த குடைமிளகாய் சிக்கன கிரேவி சப்பாத்தி, பூரி, நாண் மற்றும் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை தாராளமாக செய்து கொடுக்கலாம். சரி வாருங்கள், இப்போது குடைமிளகாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

சிக்கனை வேக வைப்பதற்கு…

  • சிக்கன் - 1 கிலோ
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

கிரேவிக்கு…

  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் - 2 (நறுக்கியது)
  • தக்காளி - 3 (நறுக்கியது)
  • பச்சை குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி கெட்சப் - 1/4 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு
  • கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் குக்கரில் சிக்கனுடன், அதை வேக வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு கிளறி விட்ட, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
  • குக்கர் விசில் அடங்கிய பிறகு, குக்கரைத் திறந்து சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  • அத்துடன், தக்காளியை சேர்த்து மீண்டும் 5 நிமிடத்திற்கு வதக்கியதும், வாணலியை இறக்கி வைத்து ஆற விடவும்.
  • இப்போது அதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5-10 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • அத்துடன் மசாலா பொடிகள், தக்காளி கெட்சப், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி விடவும்.
  • பின்னர் அதில் வேக வைத்துள்ள சிக்கனை நீருடன் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறவும்.
  • 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான குடைமிளகாய் சிக்கன் கிரேவி தயார்.

Image Courtesy: yummytummyaarthi