குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதிலும், சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் எப்படியாவது சாப்பிட வைக்க அதை விதவிதமாக சமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில், பெரும்பாலானவர்கள் ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் ஒன்றாக பீட்ரூட்டை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஒரு அருமையான ரெசிபி எப்படி செய்வது என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம். பீட்ருட்டை வைத்து ஒரு சுலபமான சுவையான வடை செய்து அசத்தலாம் வாருங்கள்…

தேவையான பொருட்கள்:

  • துருவிய பீட்ருட் - 1 கப்
  • கடலை பருப்பு - 1/2 கப்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 4-5
  • இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - சிறிது
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் கடலைப்பருப்பை சுடுநீரில் ஒரு 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
  • பின் அதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது அதே மிக்சர் ஜாரில் சோம்பு, வரமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை லேசாக அரைத்து, அதை அரைத்த கடலைப் பருப்புடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு, அந்த கலவையுடன் அரிசி மாவு, துருவிய பீட்ருட், வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் ஊடேறியதும் அதில் வடைக்கு தயாரித்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பீட்ரூட் வடை தயார்.