ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பழக்கம் இருப்பது வழக்கம் தான். சிலருக்கு டீ, காபி போன்றவை அதிகமாக குடிக்கும் பழக்கம் இருக்கும். சாப்பிடுகிறார்களோ இல்லையோ, ஆனால் டீ மட்டும் 5 முதல் 6 வேளை குடித்தாக வேண்டும். அப்போது தான் அன்றைய தினம் வேலை ஆகும். இல்லையென்றால், தலைவலி, மிகுதியான கோபம் முதலியவை ஏற்படக்கூடும். உடலுக்கு இது நல்லதா கெட்டதா என்றெல்லாம் பார்த்து இதை யாரும் செய்வது கிடையாது. அவர்களுக்கு அது பழகிவிட்டது என்பதால் தான் செய்கின்றனர். அப்படி டீ குடிக்கும் போது உடன் ஏதாவது நொறுக்கி தீனி சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். குறிப்பாக, மழை காலத்தில் சுடசுட டீ உடன், சூடான வெங்காய பக்கோடா சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். ஆனால், டீ குடிக்கும் போதோ அல்லது டீ குடித்த உடனேயோ சில குறிப்பிட்ட பொருட்களை சாப்பிட கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…
முளைக்கட்டிய தானியங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள்
உண்மையில், டீ குடிக்கும் போது முளைக்கட்டிய தானியங்களோ அல்லது சமைக்கப்படாத பச்சை காய்கறிகள், பழங்களையோ சாப்பிடக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு டீ குடிக்கும் போதோ அல்லது டீ குடித்த உடனேயே இவற்றை சாப்பிடுவது வயிற்று பகுதியைச் சேதப்படுத்தக்கூடுமாம். எனவே, இனி டீ குடிக்கும் போது இவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
பக்கோடா
முன்பே கூறியது போல, மழை நேரத்தை திருப்தி அடைய செய்வதே டீயுடன் கூடிய வெங்காய பக்கோடா அல்லது பஜ்ஜி தான். ஆனால், அது உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் வல்லுநர்கள். ஏனென்றால், டீயுடன் கடலை மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமாம்.
மஞ்சள்
மஞ்சள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும் டீயுடன் அல்லது டீ குடித்த உடனேயே சாப்பிடக்கூடாது. உண்மையில், மஞ்சள் கலந்த பொருட்களை டீயுடன் அல்லது டீ குடித்த உடனேயே சாப்பிடுவது செரிமான அமைப்பை மோசமாக்கும்.
எலுமிச்சை
பலர் எலுமிச்சையை தேநீரில் கலந்து குடிக்க விரும்புவார்கள். இருப்பினும், இது உங்களுக்கு அமிலத்தன்மை மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி, டீ குடித்த உடனேயே சிட்ரஸ் பழங்களான, புளிப்பு சுவை கொண்ட பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
முட்டை
முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒன்று. அதனாலேயே, மக்கள் அதை மிகவும் அதிகமாக சாப்பிட விரும்புகிறார்கள். இருப்பினும், வேகவைத்த முட்டைகளை டீயுடன் சேர்த்தோ அல்லது டீ குடித்த உடனேயோ உட்கொள்ளக்கூடாது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.