சிறு தானியங்கள் உடலுக்கு நல்லது என்று அனைவரும் கூறுவது உண்டு. இன்றைய தலைமுறையினர் பலருக்கு சிறு தானியங்கள் என்றால் என்னவென்று கூட தெரியாது. பலருக்கு சிறு தானியங்களில் என்ன சமைத்து சாப்பிடுவது என்று தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த ரெசிபியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வெண்பொங்கல் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. அதனால் இப்போது திணையில் எவ்வாறு வெண்பொங்கல் செய்வது என்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

திணை – அரை கப்

பாசி பருப்பு – ¼ கப்

தண்ணீர் – 3 கப்

உப்பு – சுவைக்கேற்ப

நெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க:

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

முந்திரி – 5

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

*முதலில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், திணை மற்றும் பாசி பருப்பை போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.

*வறுத்த திணை மற்றும் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு நீர் ஊற்றவும்.

*இப்போது நீர் ஊற்றிய பாத்திரத்தை குக்கரில் வைத்து 10 முதல் 12 விசில் விட்டு இறக்கிடவும்.

*குக்கர் விசில் தானாக அடங்கும் வரை அதை திறக்க வேண்டாம். விசில் அடங்கிய பிறகு திறந்து நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.

*அடுத்ததாக, ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அதில் தாளிக்க தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து 1 நிமிடத்திற்கு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

*இப்போது, வேக வைத்து மசித்த திணை மற்றும் பருப்பு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி இறக்கினால் சுவையான திணை வெண்பொங்கல் சுவைக்க தயார்.

*இதனை சாம்பார் அல்லது சட்னியுடன் பரிமாறினால் வேண்டாம் என கூறாமல் கேட்டு விரும்பி சாப்பிடும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.