உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பது பலரது பிரச்சனையாக இருந்தால், சிலருக்கு உடல் எடை குறைவாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தால் குண்டாக இருக்கிறாய் என்றும், அதுவே உடல் எடை குறைவாக இருந்தால் ஒல்லி குச்சி என்றும் அழைக்கும் பழக்கம் உள்ளது. சிலர் என்ன சாப்பிட்டாலும் அவர்களது உடல் எடை மட்டும் அதிகரிக்கவே அதிகரிக்காது. அப்படிப்பட்டவர்களை அடுத்தவர்களின் வார்த்தைகள் சற்று வேதனைப்படுத்தக்கூடும். அதற்காக அதிகமாக சாப்பிடுவார்கள். இருந்தாலும், எந்த வித்தியாசமும் ஏற்பட்டிருக்காது. அத்தகையவர்களுக்கு உதவும் வகையில் இந்த கட்டுரையைப் பதிவிடுகிறேன். இதில் கொடுக்கப்பட்டுள்ள 3 முறைகளை பின்பற்றி வந்தாலே உடல் எடை தானாக அதிகரித்திடும். அதிலும், பாலுடன் குறிப்பிட்ட பொருட்களைச் சேர்த்து உண்பதால் சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணரலாம்.
பால் மற்றும் நெய்
கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த பால், ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கக்கூடியது. மறுபுறம், நெய்யில் நிறைவுற்ற கொழுப்புடன் அதிகமான கலோரிகளும் உள்ளன. இது எடையை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக இரவில் சூடான பாலில் 1 டீஸ்பூன் நெய் கலந்து குடித்து வரவும். இப்படி செய்து வர, சில வாரங்களிலேயே உங்கள் உடல் எடை அதிகரித்திருப்பதை உணரலாம்.
பால் மற்றும் வாழைப்பழம்
உடல் எடையை அதிகரிக்க பாலும் வாழைப்பழம் சாப்பிடுவதும் சிறந்தது. உண்மையில், வாழைப்பழத்தில் வைட்டமின்கள், ஃபோலிக் ஆசிட், புரதம், இரும்பு, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடல் எடை அதிகரிப்புடன், உடலின் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், அதற்கு பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வரலாம். ஒருவேளை உங்களுக்கு அப்படி சாப்பிட பிடிக்காது என்றால், காலை நேரத்தில் 1 கிளாஸ் பாலுடன் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். இது உங்கள் எடையை வேகமாக அதிகரிக்க செய்யும்.
பால் மற்றும் பேரீச்சம்பழம்
பால் ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. அதேபோல் தான், பேரீச்சம்பழம் அற்புதமான உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டையும் சேர்த்து உட்கொண்டால், உடல் பலவீனம் நீங்குவதுடன், உடலும் புத்துணர்ச்சி பெறும். உண்மையில், கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பாலை மற்றும் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்த பேரீச்சம்பழத்தை சேர்த்து உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. அதற்னு, ஒரு கிளாஸ் பாலில் 1-2 பேரீச்சம்பழங்களைச் சேர்த்து, குறைவான தீயில் வேக வைத்து சாப்பிடவும். இப்படி சாப்பிடுவது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, உடல் எடையையும் அதிகரிக்க உதவும்.