குளிர்கால சருமப் பராமரிப்பும் ரோஜா இதழ்களும்

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே காற்றில் ஈரப்பதம் குறைந்து, நமது சருமம் மெல்ல மெல்ல தனது பொலிவை இழக்கத் தொடங்கும். குறிப்பாக, வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த காலம் சவாலானது. சருமத்தில் வெடிப்புகள் ஏற்படுவது, முகம் பொலிவிழந்து காணப்படுவது போன்ற பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். இத்தகைய சூழலில், விலையுயர்ந்த ரசாயன அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட, இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பதே சிறந்தது.

அழகுப் பராமரிப்பில் பழங்காலம் முதலே ரோஜா பூக்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அழகு குறிப்புகள் பகுதியில் இன்று நாம் பார்க்கப்போவது, உலர்ந்த ரோஜா இதழ்களைக் கொண்டு உங்கள் சருமத்தை எப்படிப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கலாம் என்பது பற்றித்தான். ரோஜாவில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் சருமத்தை உள்ளிருந்து மென்மையாக்க உதவுகின்றன.

உலர்ந்த ரோஜா இதழ் பொடியைத் தயாரிப்பது எப்படி?

ஃபிரஷ்ஷான ரோஜா இதழ்களை நிழலில் உலர்த்தி, அவை நன்கு காய்ந்த பிறகு மிக்ஸியில் போட்டு மென்மையான பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்தால், குளிர்காலம் முழுவதும் பல்வேறு ஃபேஸ் மாஸ்க்குகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது 5 வகையான மாஸ்க்குகளைப் பார்ப்போம்.

1. ரோஜா மற்றும் பால் (Rose and Milk Mask)

வறண்ட சருமத்திற்கு பால் ஒரு சிறந்த மருந்தாகும். 2 டீஸ்பூன் உலர்ந்த ரோஜா இதழ் பொடியுடன், தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்து ஒரு பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பால் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும், ரோஜா இதழ்கள் முகத்தைப் பொலிவாக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்து வரலாம்.

2. ரோஜா மற்றும் தேன் (Rose and Honey Mask)

தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் (Natural Moisturizer). ஒரு டீஸ்பூன் ரோஜா பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து முகத்தில் தேய்க்கவும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளைக் குறைக்கவும் உதவும். காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் மென்மையாக மாறும்.

3. ரோஜா மற்றும் தயிர் (Rose and Curd Mask)

சருமம் மிகவும் டல்லாக இருந்தால் தயிர் சேர்த்து மாஸ்க் போடலாம். ரோஜா பொடியுடன் சிறிதளவு கெட்டியான தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். அதே சமயம் ரோஜா இதழ்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். இந்த மாஸ்க் சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

4. ரோஜா மற்றும் சந்தனம் (Rose and Sandalwood Mask)

சிலருக்குக் குளிர்காலத்திலும் முகத்தில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படும். இதற்கு ரோஜா பொடி மற்றும் சந்தனப் பொடியை சம அளவு எடுத்து, அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன், முகத்திற்கு ஒருவிதத் தனித்துவமான மணத்தையும், பளபளப்பையும் கொடுக்கும்.

5. ரோஜா மற்றும் பால் ஏடு (Rose and Malai Mask)

உங்களுக்கு அதீத வறண்ட சருமம் (Extremely Dry Skin) இருந்தால், இந்தப் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறிது பால் ஏடு (Malai) எடுத்து அதனுடன் ரோஜா இதழ் பொடியைச் சேர்த்து முகத்தில் தடவுங்கள். இதில் உள்ள கொழுப்புச் சத்து சருமத்தின் வறட்சியை அறவே நீக்கி, முகத்தை பட்டுப் போல மென்மையாக மாற்றும்.

கவனிக்க வேண்டியவை

  • எந்தவொரு ஃபேஸ் மாஸ்க்கையும் முகத்தில் போடுவதற்கு முன்பு, முகத்தை சுத்தமான நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு ரோஜா அல்லது இதரப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுமா என்பதை அறிய ஒரு பேட்ச் டெஸ்ட் (Patch Test) செய்து கொள்வது நல்லது.
  • இரவு நேரங்களில் இந்த மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது அதிகப் பலன் தரும்.

மேலே சொன்ன இந்த 5 முறைகளில் உங்கள் சருமத்திற்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இந்த குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரியுங்கள்.