சிக்கனை வைத்து எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபி செய்து போர் அடிக்குதா? அப்படியெனில், ஒரு ஸ்நாக்ஸ் மாதிரியான ரெசிபியை சிக்கனை வைத்து செய்யலாமே. இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஈவினிங் டைம் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுத்து பாருங்கள், பிறகு நீங்கள் பாராட்டு மழையில் நனைவது உறுதி. சரி வாருங்கள் இப்போது முந்திரி சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  • சோள மாவு - 1/2 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிப்பதற்கு

சாஸ் செய்வதற்கு…

  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • முந்திரி - 1/4 கப்
  • வரமிளகாய் - 3
  • வெங்காயம் - 1 (நறுக்கியது)
  • குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
  • சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
  • வினிகர் - 1 டீஸ்பூன்
  • சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • மிளகுத் தூள் - காரத்திற்கு ஏற்ப

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், அதில் பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் வரமிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயில், நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்கு வதக்கி கொள்ளவும்.
  • பிறகு அதில் சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
  • அடுத்ததாக அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு வறுத்த முந்திரி மற்றும் வரமிளகாய் சேர்த்து கிளறவும்.
  • நன்கு நீர் சுண்டும் வரை கிளறி, இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி இறக்கினால், மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் தயார்.

Image Courtesy: yummytummyaarthi