மாலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தமான, அதே சமயம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்த கொடுக்க வேண்டுமென்று தான் எல்லா அம்மாக்களும் விரும்புவார்கள். அப்படியெனில், முட்டையை வைத்து ஒரு அருமையான சில்லி போண்டா செய்து கொடுங்கள். இது டீ, காபி உடன் பரிமாறும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். வீட்டில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே விரும்பும் வகையான ஸ்நாக்ஸ் இது. சரி இப்போது, சில்லி முட்டை போண்டா எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

முட்டை போண்டாவிற்கு…

  • வேக வைத்த முட்டை - 4
  • கடலை மாவு - 3/4 கப்
  • அரிசி மாவு - 1/4 கப்
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

முட்டை சில்லிக்கு…

  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 3
  • வரமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிது
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு பௌலில் முட்டை போண்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும் அதில் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி, போண்டா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் முட்டை போண்டா தயார்.
  • பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
  • இப்போது அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.
  • மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு, பொரித்தெடுத்த முட்டை போண்டாக்களை மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறிவும்.
  • இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சில்லி முட்டை போண்டா ரெடி…

Image Courtesy: steffisrecipes