பொதுவாகவே ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அந்த 3 நாட்களை எப்படியாவது கடந்துவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு தான் நாட்களை கடத்துகிறாள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது எவ்வளவு கஷ்டமோ அதை விட பல மடங்கு கஷ்டம் தான் ஒவ்வொரு தாய்க்கும். மாதத்தில் அந்த 3 நாட்கள் அவர்களுக்கு யாரும் விடுப்பு கொடுக்கப்போவது கிடையாது. அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் வலி சில சமயங்களில் "மாரடைப்பு போன்ற மோசமானதாக" இருக்கும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இருப்பினும், அனைத்து வலி, அதிகப்படியான இரத்தபோக்கு ஆகியவற்றை சகித்து கொண்டு அன்றாட பணிகளை பெண்கள் செய்தாக வேண்டும்.
மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான செயல்முறை தான் என்றாலும் கூட அதனால் ஏற்படக்கூடிய வலி சற்று கடினமான ஒன்றாக தான் உள்ளது. இனிமேல் அந்த வலிகளை பொறுத்தக்கொள்ள வேண்டுமென்ற எந்த கவலையும் வேண்டாம். இங்கே, மாதவிடாய் வலிகளை போக்க உதவக்கூடிய, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட எளிய வீட்டு வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முயற்சித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்…
மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்…
நல்லெண்ணெய்
பாரம்பரியமாக நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருக்கிறது. நல்லெண்ணெயில் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது. மேலும், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது. எனவே, மாதவிடாய் காலத்தில் வலி அதிகமாக இருக்கும் போது நல்லெண்ணெயை அடிவயிற்றில் தடவி மசாஜ் செய்யலாம். இது வலியை போக்க மிகவும் உதவும்.
வெந்தயம்
பொதுவாகவே வெந்தயம் உடல் எடையை குறைக்க உதவும். அதுமட்டுமில்லாமல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது. வெந்தயத்தின் உதவியுடன் மாதவிடாய் வலியைக் குறைக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தண்ணீரில் 12 மணி நேரம் வெந்தயத்தை ஊறவைத்து, பின்னர் அந்த நீரை குடிக்கவும். இதனால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சுடுநீர் ஒத்தடம்
அடிவயிற்றின் கீழ் பகுதியில் வெப்பத்தைப் பயன்படுத்துவது கருப்பையில் உள்ள சுருங்கும் தசைகளை தளர்த்த உதவுகிறது. எனவே, சூடான தண்ணீர் பாட்டில் அல்லது ஹாட் வாட்டர் பேக்கில் ஊற்றி அடிவயிற்று பகுதியில் சிறிது நேரம் வைத்துக்கொள்ளவும். இல்லையெனில், ஹீட்டிங் பேட்கள் அல்லது பேட்ச்களை கூட உங்கள் வசதிக்கு ஏற்ற பயன்படுத்தலாம். மேலும், மாதவிடாய் வலியின் போது சூடாக ஏதாவது குடிப்பது அல்லது சூடு நீரில் குளிப்பது போன்றவையும் வலியை நீக்கி உங்களை மிகவும் நிம்மதியாக உணர செய்யும்.
இஞ்சி மற்றும் மிளகு டீ
இஞ்சி மற்றும் கருப்பு மிளகு பயன்படுத்தி டீ போட்டு குடிக்கலாம். வேண்டும் என்றால், சுவைக்காக சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கண்டிப்பாக பாலை தவிர்க்கவும். இஞ்சி மாதவிடாய் வலியை திறம்பட குறைக்கும். ஏனெனில் இது புரோஸ்டாக்லாண்டின்ஸ் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை ஒழுங்கமைக்கவும் மற்றும் மாதவிடாய்க்கு முந்தைய உடற்சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
சீரகம்
மாதவிடாய் வலியைக் குறைக்க சீரகத்தை பயன்படுத்தி டீ போட்டு குடிக்கலாம். சீரகம் உடலுக்கு தளர்வுகளை கொடுத்து வலியைப் போக்கும். மேலும் அதிலுள்ள ஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் கால தசைப்பிடிப்புகளை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.